ஷமி குறித்த அவதூறு பதிவுகளை நீக்கிய ஃபேஸ்புக்!

Updated: Tue, Oct 26 2021 11:38 IST
Image Source: Google

இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். இதுவரை டி20, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 13 முறை பாகிஸ்தான் அணி தோல்வி கண்டிருந்தது. 

இந்த முறையும் தோல்வி காணும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பாபா்-ரிஸ்வான் இணையின் அதிரடி ஆட்டத்தால் வரலாற்றை மாற்றியது பாகிஸ்தான். துபை சா்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 151/7 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி கண்டது.

இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே முக்கியக் காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் அவரை இழிவுபடுத்தி பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. நேற்றைய ஆட்டத்தில் 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்தார் ஷமி. இந்தியப் பந்துவீச்சாளர்களில் அதிக ரன்களை கொடுத்தவர் அவர்தான்.

ஷமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் ஷமியைத் துரோகியாகச் சித்தரித்து மத ரீதியிலான பதிவுகள் எழுதியுள்ளார்கள். இந்திய அணிக்குத் துரோகம் செய்ததால் அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் எழுதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இதையடுத்து சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், ஹர்பஜன் சிங் உள்பட பிரபலங்கள் பலரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தில் ஷமிக்கு எதிராகவும் அவரை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரை இழிவுபடுத்தும் பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

எங்களுடைய விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். சமூகவலைத்தளங்களில் தொல்லைகளில் இருந்து பிரபலங்களைப் பாதுகாப்பது தொடர்பான எங்களுடைய விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்துள்ளோம் என்று ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை