ஐபிஎல் 2021: அன்று வாட்சன்; இன்று டூ பிளெசிஸ்!
14வது சீசன் ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி தங்களது இன்னிங்சின் கடைசி பந்தில் 172 ரன்களை குவித்து திரில்லிங்கான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலாவது இன்னிங்சில் பீல்டிங் செய்த சிஎஸ்கே அணியில் டூபிளெஸ்ஸிஸ் தனது இடது காலின் முட்டிக்கு மேல் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில் பீல்டிங் செய்தார். அவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதேபோன்று 2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் ரத்த காயத்துடன் விளையாடியது ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் பீல்டிங்கின் போது ஏற்பட்ட ரத்தக் காயத்துடன் மீண்டும் வெளியேறாமல் பீல்டிங் செய்தது மட்டுமின்றி பேட்டிங்கும் செய்ய வந்தார். அந்த ரத்த காயத்துடன் பேட்டிங் செய்த அவர் 30 பந்துகளில் 43 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்திருந்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இறுதியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டூபிளெஸ்ஸிஸ்ன் இந்த அர்ப்பணிப்பு தற்போது ரசிகர்களின் மனதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.