SA20 League: சதமடித்து மிரட்டிய டூ பிளெசிஸ்; ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜஹனன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
ஆனால் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய கைல் மேயர்ஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேத்யூ ப்ரீட்ஸ்கி 28, விஹான் முல்டர் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய கிளாசென் அரைசதத்தையும் பதிவுசெய்தார். பின்னர் 48 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி 65 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் ஜேசன் ஹோல்டர் 12 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களைச் சேர்த்து உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, ஜெரால்ட் கோட்ஸி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஹெண்ட்றிக்ஸ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டூ பிளெசிஸ் 58 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.