RSA vs PAK: ஃபக்கர் ஸமானின் போராட்டம் வீண்; த்ரில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா!
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் அதிரடியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஜஹனெஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், மார்க்ரம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதில் 39 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரம் அஷ்ரஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் - டெம்பா பவுமா இணை சிறப்பாக விளையாடி, அரைசதம் கடந்ததோடு அணியின் ஸ்கோரை உயர்த்தவும் உதவினர்.
இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டி காக் 80 ரன்களிலும், பவுமா 92 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் எதிரணி பந்துவீச்சி பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதன் மூலம் இன்னிங்ஸ் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டெம்பா பவுமா 92 ரன்களையும், டி காக் 80 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இமான் உல் ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் , சதாப் கான் என அதிரடி வீரர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் போராடிவந்த ஃபக்கர் ஸமான் சதமடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸமான் இரட்டைச் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 193 ரன்களில் டி காக்கின் சாமர்த்தியத்தால் ஆட்டமிழந்து, இரட்டைச் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 17 ரன்கள் வித்தியாசத்திக் பாகிஸ்தானை வீழ்த்தியதோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.