BBL 12: ஆரோன் ஃபிஞ்ச் காட்டடி; தண்டரை வீழ்த்தியது ரெனிகேட்ஸ்!
பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகீறது. இன்று மெல்பர்னில் நடந்த போட்டியில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணியில் ரைலீ ரூஸோ அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதில் 38 பந்தில் ரூசோ 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ரோஸ் 23 பந்தில் 39 ரன்களும், ஒலிவர் டேவிஸ் 18 பந்தில் 33 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் தரப்பில் டாம் ரோஜர்ஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பிம் 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் சாம் ஹார்பர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜேக் ஃபரெசரும் 24 ரன்களோடு நடையைக் கட்டினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான மாடின்சன் 39 ரன்கள் அடித்தார்.
அதன்பின் 4ஆம் வரிசையில் இறங்கிய ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணியின் வெற்றியை எளிதாக்கினார். இப்போட்டியில் 43 பந்துகளை எதிர்கொண்ட ஃபிஞ்ச் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.