ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் தன்நம்பிக்கை குறைந்துவிட்டது - ஸ்டீஃபன் பிளமிங்!
முதல் மூன்று போட்டியிலும் படுதோல்வியை சந்தித்த ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரின் 17வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மொய்ன் அலி 48 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா 75 ரன்களும், ராகுல் த்ரிபாட்டி 39 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 17.4 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய ஹைதராபாத் அணி, சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங், தொடர் தோல்விகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் தன்நம்பிக்கையே குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிளமிங் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் ஒரு விசயம் தெளிவாக உள்ளது. சென்னை அணியின் பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் நிச்சயம் முன்னேற்றங்களை ஏற்படுத்தியே ஆக வேண்டும். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டோம்.
சில முக்கிய வீரர்களின் இடங்களை சரி செய்ய சரியான வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறோம், ஒவ்வொரு வீரர்களும் தாங்களாக முன்வந்து தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். இந்த தொடரில் நாங்கள் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பதை விட, வெற்றியின் அருகில் கூட செல்ல முடியாதது எங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தொடர் தோல்விகளால் எங்கள் வீரர்கள் தன்நம்பிக்கை இழந்துவிட்டதை போன்று தெரிகிறது. எங்களால் முடிந்தவரை விரைவாக அனைத்து தவறுகளை சரி செய்து கொண்டு இந்த தொடரில் வெற்றி பயணத்தை தொடர முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.