இது ஒரு தேசியக் கடமை, இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது - இஷான் கிஷான் குறித்து காம்ரன் அக்மல்!

Updated: Tue, Jan 16 2024 21:53 IST
இது ஒரு தேசியக் கடமை, இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது - இஷான் கிஷான் குறித்து காம்ரன் அக்மல்! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் இஷான் கிஷன். இவருக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்காவிடிலும், கிடைத்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார். அதிலும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர்தான் விக்கெட் கீப்பர் என கருதப்பட்டது. ஆனால் கேஎல் ராகுல் உடற்தகுதி பெற்றதால் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன்பின் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நேரத்தில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை.

இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற தகவலும் வெளியானது. கடந்த ஏழு வாரங்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இஷான் கிஷான் இடம் பெறவில்லை. மாறாக இளம் வீரர் துருவ் ஜுரெல் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டது ரசிகர்களை குழப்பமடையச் செய்தது. 

ஏனெனில் தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாட இஷான் கிஷான் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் டெபசிஷ் சக்ரபோர்த்தி கூறினார். இதனால் இஷான் கிஷானை இந்திய அணியிலிருந்து பிசிசிஐ புறக்கணித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் காம்ரன் அக்மல், “மனச்சோர்வை சமாளிப்பதற்காக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியில் இருந்து இஷான் கிஷான் விடுவிக்கப்பட்டதாக பேச்சு அடிபடுகிறது. இதே அணியில் ரோஹித் சர்மா விராட் கோலி போன்ற பல முன்னணி வீரர்கள் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். இவர்கள் ஓய்வு எடுப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

இஷான் கிஷான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடிய இளம் வீரர். இந்த நேரத்தில் இவருக்கு என்ன மாதிரியான மனச் சோர்வு வந்துவிடும் என்று தெரியவில்லை. இரண்டு மாதம் ஐபிஎல் தொடருக்காக நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்கிறீர்கள். இந்திய அணியில் விளையாடுவது மிகப்பெரிய விஷயம். இப்படி இருக்கும் பொழுது இசான் கிஷான் கூறியுள்ள சாக்குப்போக்கு எனக்கு புரியவே இல்லை.

அவர் இப்பொழுது ஓய்வெடுக்கட்டும் பிறகு உள்நாட்டு கிரிக்கெட் விளையாடட்டும் என்று இசான் கிஷானை தொடர்ந்து தேர்வு செய்யாமல் புறக்கணித்து இந்திய தேர்வுக்குழு சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறது. மேலும் மன உளைச்சல் என்கின்ற பெயரில் நாளை எந்த வீரர்களும் திடீரென இப்படி வந்து ஓய்வு கேட்க முடியாது என்பதையும் இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்கள். இது ஒரு தேசியக் கடமை, இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை