தீப்தி குறித்து பேசியதற்காக மிட்செல் ஸ்டார்க்கை சாடிய ஹேமங் பதானி!

Updated: Sun, Oct 16 2022 20:07 IST
Former Indian Player Hemang Badani Opens-Up On Starc's Reference Over Deepti Against England (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை தொடர் இன்று (அக்.16) முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைப்பதற்காக வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அதில் முதலிரண்டு போட்டிகளில் தலா 8 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் போராடி தோற்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை இழந்து தலை குனிந்தது. 

உலக கோப்பை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இப்படி கடைசி நேரத்தில் தங்களது அணி சொந்த மண்ணில் மண்ணை கவ்வியுள்ளது ஆஸ்திரேலிய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி அக்டோபர் 14ஆம் தேதியன்று கான்பெரா நகரில் நடைபெற்றது. மழையின் குறுக்கீட்டால் தலா 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லருடன் 2ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் 4 பவுண்டரியுடன் 23 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் பட்லர் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 65* (41) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் பினிசிங் கொடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் இங்கிலாந்து 112/2 ரன்கள் சேர்த்தது.

அதை தொடர்ந்து 113 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரை வீசிய கிறிஸ் வோக்ஸ் முதலிரண்டு பந்துகளில் கேப்டன் ஆரோன் பின்ச், மிட்சேல் மார்ஷல் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 0/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அணிக்கு சுமாரான பார்மில் தவிக்கும் மேக்ஸ்வெலும் 8 ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் மீண்டும் தோல்வியை சந்திக்க காத்திருந்த ஆஸ்திரேலியா 3.5 ஓவரில் 30/3 ரன்கள் எடுத்திருந்தபோது மழை போட்டியை மேற்கொண்டு நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியது.

அப்படி சொந்த மண்ணில் மழையின் உதவியால் வைட்வாஷ் தோல்வியிலிருந்து ஆஸ்திரேலியா தப்பினாலும் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து 2 – 0 என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பை வென்று அசத்தியது. முன்னதாக இப்போட்டியில் 5ஆவது ஓவரை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசினார். அப்போது அந்த ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கிரீஸ் விட்டு அடிக்கடி வெளியே வருவதை கவனித்த அவர் ஒரு பந்தை வீசி விட்டு அடுத்த நொடியே ரன் அவுட் செய்து விடுவேன் என்று கடுமையாக எச்சரித்து நடுவரிடமும் புகார் செய்தார்.

மேலும் “நான் தீப்தி இல்லை அதனால் நான் அதை செய்ய மாட்டேன், ஆனால் நீ சீக்கிரம் கிரீஸை விட்டு கிளம்பு என்று அர்த்தம் இல்லை” என்று கூறியது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதற்கு பட்லர்,     “நான் அப்படி செய்ததாக எனக்கு தொன்றவில்லை” என கூறினார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் தீப்தி சர்மா குறித்து பேசியதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி, ஸ்டார்க்கை சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், " ஸ்டார்க், நீங்கள் செய்தது மிகவும் மோசமானது. தீப்தி செய்தது விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டது. 'நான் ஸ்ட்ரைக்கரை' எச்சரித்து, அவரை அவுட்டாக்காமல் இருக்க விரும்பினால், அது நல்லது. அது நீங்கள் எடுக்கும் முடிவு. ஆனால் நீங்கள் தீப்தியை இதற்குள் கொண்டு வந்ததை கிரிக்கெட் உலகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை