3rd Test: ஸ்டார்க், போலண்ட் வேகத்தில் சுருண்டது விண்டீஸ்; ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

Updated: Tue, Jul 15 2025 11:25 IST
Image Source: Google

WI vs AUS, 3rd Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களையும், கேமரூன் க்ரீன் 46 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் காம்பெல் 36 ரன்களையும், ஷாய் ஹோப் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் 80 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தை கேமரூன் க்ரீன் 42 ரன்களுடனும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கேமரூன் க்ரீன் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடன் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். 

இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிட்செல் ஸ்டார்க் மூலம் பேரதிர்ச்சி காத்திருந்தது. இன்னிங்ஸின் முதல் ஓவரை ஸ்டார்க் வீசிய நிலையில் முதல் பந்திலேயே ஜான் காம்பெல்லின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

அதன்பின் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் கெவ்லன் ஆண்டர்சன் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதன்பின் மிட்செல் ஸ்டார்க் தனது மூன்றாவது ஓவரில் மைக்கெல் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரது விக்கெட்டுகளையும் கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் களமிறங்கிய ஜஸ்டின் க்ரீவ்ஸ் 11 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த அல்ஸாரி ஜோசப் 4 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 14.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 27 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன் 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றும் அசத்தியது. மேலும் இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை