கேப்டன், பயிற்சியாளர் முடிவை விமர்சித்த முகமது கைஃப்!

Updated: Sun, Jul 31 2022 10:48 IST
Former Players Left 'Wondering' As Team India Continue Their 'Opener' Woes (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசால்டாக அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், தீபக் ஹூடாவிற்கு இடம் கொடுக்காதது ஏன்..? என முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணமே இல்லாமல் தீபக் ஹூடா அணியில் இருந்து நீக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியின் முடிவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். 

அதே போல் முதல் டி.20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டதையும் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃபும், முதல் டி.20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டதை விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “சூர்யகுமார் யாதவை எதற்காக துவக்க வீரராக களமிறக்கினார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சில போட்டிகளில் ரிஷப் பந்தை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணி, இந்த முறை ஏன் அவரையே துவக்க வீரராக களமிறக்காமல் சூர்யகுமார் யாதவை களமிறக்கினார்கள் என்பது தெரியவில்லை. ரிஷப் பந்தை இது போன்ற சூழ்நிலைகளில் துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என நினைத்தால் அவருக்கு குறைந்தது 5 போட்டிகளிலாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும். 

கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் புதிதாக முயற்சி எடுக்க நினைத்தால், குறைந்தது 5-6 போட்டிகளிலாவது வீரர்களுக்கு சரியான வாய்ப்பை வழங்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் களமிறங்கி போட்டியின் தன்மைக்கு ஏற்ப விளையாடக்கூடியவர். அவரால் இறுதி வரை களத்தில் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியும். சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் களமிறங்குவதே அவருக்கும், இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை