PAK vs AUS, 1st Test: தொடக்க வீரர்கள் அசத்தல்; டிராவில் முடிந்த ராவல்பிண்டி டெஸ்ட்!

Updated: Tue, Mar 08 2022 17:55 IST
Image Source: Google

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்று தொடங்கியது. ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்று தொடங்குகிறது. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. 

இதில் முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 

இதற்கு முன்பு, இரு அணிகளும் இதுவரை 25 டெஸ்டுகளில் மோதியுள்ளன. ஆஸ்திரேலியா 13 டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் 7 டெஸ்டுகளிலும் வென்றுள்ளன. 1998-ல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸி. அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடருக்கு பெனாட் - காதிர் கோப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 162 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 140.1 ஓவர்களில் 459 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து இன்று 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி, 77 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது. பாகிஸ்தானின் அப்துல்லா ஷஃபிக் 136 ரன்களும் இமாம் உல் ஹக் 111 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆட்ட நாயகனாக இமாம் உல் ஹக் தேர்வானார். 

மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் மார்ச் 12 அன்று கராச்சியில் தொடங்குகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை