கெய்க்வாட்டிற்கு மாற்றாக இமாம் உல் ஹக்கை ஒப்பந்தம் செய்தது யார்க்ஷயர்!

Updated: Mon, Jul 21 2025 22:04 IST
Image Source: Google

கவுண்டி கிரிக்கெட்: யார்க்ஷயர் அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பாகிஸ்தானின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரராகவும் அறியப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக இதுவரை 23 டி20 போட்டிகளிலும் 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிவுள்ளார். இந்நிலையில் தான் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இதன் மூலம் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக யார்க்ஷயருடனான கவுண்டி சாம்பியன்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவர் எந்த காரணத்திற்காக இதிலிருந்து விலகினார் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இதுகுறித்து பேசிய யார்க்ஷயர் அணியின் தலைமை பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத், “துரதிர்ஷ்டவசமாக ருதுராஜ் கெய்க்வாட் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் விளையாட முடியவில்லை. இத்தொடரில் இருந்து அவர் விலகியுள்ளது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அவர் ஏன் விலகினார் என்பதற்கான காரணத்தை நான் உங்களிட்ம் கூற முடியாது, ஆனால் எல்லாம் சரியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தொடரிலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் யார்க்ஷயர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளர். இதுகுறித்து பேசிய அந்த அணியின் பொது மேலாளர் கேவின் ஹாமில்டன், “இமாம் உல் ஹக் எங்களுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவர் கூடிய விரைவில் எங்களுடன் இணைவார். ருதுராஜ் அணியில் சேர முடியாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

ஆனால் தற்சமயம் இமாம் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த ஒரு வீரர் எங்களிடம் இருக்கிறார். மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் கவுண்டி கிரிக்கெட் தொடரிலும் ஏற்கெனவே விளையாடிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். இதனால் அவர் எங்கள் அணியில் இணைந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இமாம் உல் ஹக் ஏற்கெனவே சோமர்செட் அணிக்காக கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

மேலும் அவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 24 டெஸ்ட், 75 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 29 அரைசதங்கள் என 4600 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளர். மேற்கொண்டு முதல் தர கிரிக்கெட்டில் 84 போட்டிகளில் 145 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 15 சதங்கள் மற்றும் 25 அரைசதங்கள் என 5435 ரன்களைச் சேர்த்துள்ளார். இதன்மூலம் இவரது அனுபவம் யார்க்ஷயர் அணிக்கு நிச்சயம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை