கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து அறிக்கை வெளியிட்ட டிம் பெயின்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 8இல் ஆரம்பித்து ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இரு நாள்களுக்கு முன்பு டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46ஆவது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். இந்நிலையில் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் டிம் பெயின்.
கடந்த 2017இல் டாஸ்மானியா கிரிக்கெட் அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
அதில் டிம் பெயின், விதிமுறைகளை மீறவில்லை என்பதால் தண்டனையிலிருந்து தப்பினார். இந்நிலையில் இந்தச் சர்ச்சை ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் இச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நீடிப்பது உகந்ததாக இருக்காது எனக் கருதி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். எனினும் ஆஷஸ் தொடரில் ஒரு வீரராகப் பங்குபெற விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக டிம் பெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதை இன்று அறிவிக்கிறேன். இது கடினமாக இருந்தாலும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கிரிக்கெட்டுக்கும் சரியானதாக இருக்கும்.
என்னுடைய முடிவுக்குக் காரணம் - 4 வருடங்களுக்கு முன்பு உடன் பணிபுரிந்தவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அப்போது இந்த உரையாடல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் டாஸ்மானியாவின் விசாரணைகளின் முடிவில் நான் விதிமுறைகளை மீறவில்லை எனத் தெரிய வந்தது. குற்றச்சாட்டிலிருந்து நான் விடுவிக்கப்பட்டாலும் அச்சம்பவம் பற்றி அப்போது மிகவும் வருந்தினேன். இப்போதும்.
என் மனைவி, குடும்பத்தினரிடம் அப்போது நான் பேசி விளக்கம் அளித்தேன். அவர்கள் அளித்த மன்னிப்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன். அச்சம்பவம் முடிந்துவிட்டது, என்னால் கிரிக்கெட்டில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும் என எண்ணினோம். அப்படித்தான் கடந்த மூன்று, நான்கு வருடங்களாகச் செயல்பட்டேன்.
தனிப்பட்டமுறையிலான அந்த உரையாடல் சமீபத்தில் ஊடகங்களில் வந்ததை அறிந்தேன். 2017-ல் உண்டான என்னுடைய இந்தச் செயல்கள், ஒரு ஆஸ்திரேலிய கேப்டனுக்குத் தேவையான அளவுகோலைப் பூர்த்தி செய்யவில்லை. என் மனைவிக்கும் என் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் என்னால் ஏற்பட்ட வேதனைக்காக மன்னிப்பு கோருகிறேன்.
அதனால் கேப்டன் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதுதான் சரியாக முடிவாக இருக்கும் என நம்புகிறேன். ஆஷஸ் தொடருக்கு முன்பு இந்த விவகாரம் தேவையில்லாத தொல்லையை ஆஸ்திரேலிய அணிக்கு அளிக்கவும் நான் விரும்பவில்லை. ரசிகர்களுக்கும் கிரிக்கெட் சமூகத்துக்கும் என்னால் ஏற்பட்ட ஏமாற்றத்துக்காக மன்னிப்பு கோருகிறேன்.
Also Read: T20 World Cup 2021
எனக்கு அன்பான, ஆதரவான குடும்பம் அமைந்துள்ளது. அவர்களை இந்நிலைக்குத் தள்ளியதற்காக மனம் உடைகிறேன். எனக்கு ஆதரவாக எப்போதும் இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரராக நான் தொடர்ந்து பங்களிப்பேன். ஆஷஸ் தொடரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.