புஜாரா, ரஹானேவின் நிலை குறித்து சவுரவ் கங்குலி கருத்து!

Updated: Thu, Feb 03 2022 17:42 IST
Image Source: Google

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான அஜிங்கியா மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மிடில் ஆர்டரில் முக்கியமான வீரர்கள். ஆனால் அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டரில் அவர்களது சொதப்பலால் இந்திய அணி தோல்வியடைய நேர்கின்றது.

புஜாரா, ரஹானேவின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துவிடுகிறது. அண்மையில் கூட, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் ஆடி மொத்தமாகவே புஜாரா 124 ரன்களும், ரஹானே 136 ரன்களும் மட்டுமே அடித்தனர். 

இவ்வாறாக சீனியர் வீரர்களான புஜாராவும் ரஹானேவும் தொடர்ந்து சொதப்பிவரும் அதேவேளையில், ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் அவர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

பிசிசிஐயின் வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் ஏ பிரிவில் (ரூ.5 கோடி) இடம்பெற்றுள்ள புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் பி பிரிவிற்கு பின் தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய டெஸ்ட் அணியில் அவர்கள் இடம்பிடித்தாலும், ஆடும் லெவனில் நிரந்தர இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

இந்நிலையில், புஜாரா மற்றும் ரஹானே இந்திய டெஸ்ட் அணியில் நீடிப்பது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் மிகச்சிறந்த வீரர்கள். அவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி அதிகமான ரன்களை குவித்து மீண்டும் இந்திய அணியில் அவர்களுக்கான இடத்தை பிடிப்பார்கள் என நம்புகிறேன். 

அவர்கள் ரஞ்சியில் ஆடுவதில் எந்த பிரச்னையும் இருக்காது என நினைக்கிறேன். ரஞ்சி தொடர் மிகப்பெரிய தொடர். நாங்கள் அனைவருமே ரஞ்சி போட்டிகளில் ஆடியிருக்கிறோம். எனவே அவர்கள் இருவரும் ரஞ்சியில் சிறப்பாக ஆடி மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை