பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிறிஸ்டன், ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!

Updated: Mon, Apr 29 2024 13:26 IST
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிறிஸ்டன், ஜேசன் கில்லெஸ்பி நியமனம்! (Image Source: Google)

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி  லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. ஏனெனில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது, நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறமால் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதையடுத்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், இயக்குநர் மிக்கி ஆர்தர், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

மேலும் பாபர் ஆசாமும் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் அணிக்கான கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். மேலும் அணியின் ஆலோசகராகாவும் முகமது ஹபீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால் அதன்பின் பாகிஸ்தான் அணி மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் படுதோல்வியைத் தழுவியதை அடுத்து, அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்த முகமது ஹபீஸும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.  

மேலும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் பாபர் ஆசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கியுள்ளதால் அணியின் முழுநேர பயிற்சியாளரை நியமிக்கும் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது. அதன்படி தற்போது பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் பயிற்சியாளாராக கேரி கிறிஸ்டனும், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 101 டெஸ்ட் மற்றும் 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேரி கிறிஸ்டன், கடந்த 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி அந்த அணிகாக 71 டெஸ்ட் மற்றும் 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியுடன் கேரி கிறிஸ்டன் உடன் பயணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை