பாகிஸ்தான் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டியன்?

Updated: Thu, Oct 28 2021 20:02 IST
Gary Kirsten Likely To Become Next Head Coach Of Pakistan (Image Source: Google)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2 ஆண்டுகளாக இருந்துவந்தவர் மிஸ்பா உல் ஹக். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணியை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைத்து, இளம் வீரர்கள் நிறைந்த வலுவான அணியாக உருவாக்கினார்.

அதிலும் 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை படுதோல்விக்கு பின்னர், பாபர் அசாம் தலைமையிலான இளம் துடிப்பான அணியை கட்டமைத்ததில் மிஸ்பா உல் ஹக்கின் பங்களிப்பு அளப்பரியது. பாகிஸ்தான் வீரர்கள் எல்லா காலக்கட்டத்திலும் திறமையான வீரர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அந்த அணி வீரர்களின் ஃபிட்னெஸ் மோசமாக இருந்தது. காலங்காலமாக அவர்களது ஃபீல்டிங்கும் மோசமாக இருந்திருக்கிறது.

ஃபிட்னெஸ், ஃபீல்டிங் ஆகிய இரண்டு விஷயங்களிலும் பாகிஸ்தான் அணியை தேற்றிவிட்டு டி20 உலக கோப்பைக்காக தயார்படுத்திய மிஸ்பாவும் வக்காரும், ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பேற்றதும், தாங்கள் வகித்த பதவிகளை ராஜினாமா செய்தனர். 

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக்கும், பவுலிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து வக்கார் யூனிஸும் விலகினர்.

இதையடுத்து டி20 உலக கோப்பைக்கான தற்காலிக பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களாக முறையே ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், தென்னாப்பிரிக்காவின் ஃபிலாண்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.  டி20 உலக கோப்பைக்கான தலைமை பயிற்சியாளராக சக்லைன் முஷ்டாக் செயல்பட்டுவருகிறார்.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக வெளிநாட்டு வீரரை நியமிப்பதில் உறுதியாக இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

அந்தவகையில், அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 3 பேரை ஷார்ட்லிஸ்ட் செய்து வைத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிறிஸ்டன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் கேடிச், இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் மூர் ஆகிய மூவரையும் ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது.

இவர்கள் மூவருமே பயிற்சியாளர் பதவியில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள். கேரி கிறிஸ்டன் 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டவர். தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியரான சைமன் கேடிச், ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் உதவி பயிற்சியாளராகவும், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டவர்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் மூர், 2 முறை இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர்கள் மூவருமே பயிற்சியாளர் பதவியில் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் என்றாலும், இந்த போட்டியில் கேரி கிறிஸ்டன் முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை