‘கவாஸ்கர் என்றும் என்னுடைய ஹீரோ தான்’ - சச்சின் டெண்டுல்கர்

Updated: Sat, Mar 06 2021 14:04 IST
Image Source: Sachin Tendulkar Twitter Account

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் 50 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து, அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும் கேப்டனுமான சுனில் கவாஸ்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாக இன்றுடன் ஐம்பது வருடங்கள் ஆகிறது. இதனை நினைவுக்கூறும் விதமாக, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையிலிருந்து சுனில் காவஸ்கருக்கு பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா தொப்பியை அன்பளிப்பாக வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின்‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர், சுனில் காவஸ்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்த சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டர் பதிவில், 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் சுனில் கவாஸ்கர் தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை ஆளத்தொடங்கினார். அவரது முதல் தொடரிலேயே 774 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அது வளர்ந்துவரும் ஒவ்வொரு வீரருக்கும் கவாஸ்கரை ஹீரோவாக காட்டியது. 

இவரது அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும், இங்கிலாந்து அணிக்கெதிராக தொடரை வென்றது. அப்போதுதான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது. 

எனது சிறுவயது முதலே நான் அவரைப்போல ஆகவேண்டும் என்று முயற்சி செய்துவருகிறேன். அது ஒருபோது மாறவில்லை. இன்றும் அவர் என்னுடைய ஹீரோவாகத் தான் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 50 ஆண்டுகளை கடந்து பொன்விழாவை கொண்டாடி வரும் சுனில் கவாஸ்கருக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணிக்காக 125 டெஸ்ட், 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் கவாஸ்கர், 13ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இதில் 35 சதங்கள், 72 அரைசதங்களும் அடங்கும். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் சுனில் கவாஸ்கர படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை