உலகக்கோப்பை தான் அடுத்த இலக்கு - ஹர்திக் பாண்டியா!

Updated: Tue, May 31 2022 11:41 IST
Going To Give It Everything To Win World Cup For India: Hardik Pandya (Image Source: Google)

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அறிமுக தொடரிலேயே பட்டம் வென்று அசத்தியது குஜராத் அணி. 

இந்த சீசனுக்காக ஏலம் முடிந்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் குஜராத்அணியை திறம்பட வழிநடத்தி கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

இறுதிப் போட்டியில் முக்கியமான பேட்ஸ்மேன்களான ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரை ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்கச் செய்து ராஜஸ்தான் அணியை சிதைவுக்கு உட்படுத்தியிருந்தார். 

இதில் இருந்து அந்த அணியால் மீளமுடியாமல் போனது. இந்த தொடரின் வாயிலாக மீண்டும் முழுமையான ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

இறுதிப் போட்டி முடிவடைந்ததும் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “என்ன நடந்தாலும் சரி இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வெல்வதுதான் எனது அடுத்த இலக்கு. இதற்காக நான் என்ன பங்களிப்பு செய்ய வேண்டுமோ அனைத்தையும் வழங்குவேன். என்னை பொறுத்தவரை இலக்கு என்பது சுலபமானதுதான். எனது அணி உச்சம்தொட வேண்டும். நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான்.

நிச்சயமாக இந்த ஐபிஎல் சீசன் சிறப்பாக அமைந்தது. ஏனெனில் நான் கேப்டனாக வென்றுள்ளேன். ஐபிஎல் தொடரில் நான் ஐந்து இறுதிப் போட்டிகளில் (4 முறை மும்பை அணிக்காக) விளையாடி ஐந்து முறையும் கோப்பையை வென்றுள்ளதில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். தற்போதைய வெற்றி வெளிப்படையாக ஒரு மரபை உருவாக்கி உள்ளது. ஏனெனில் நாங்கள் புதிய அணி, முதல் முறையாக விளையாடினோம், முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம்” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை