இன்றைய போட்டியில் எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது - ஷுப்மன் கில்!

Updated: Wed, Apr 17 2024 23:01 IST
இன்றைய போட்டியில் எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது - ஷுப்மன் கில்! (Image Source: Google)

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய் அகுஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஹாவும் 2ரன்களுகு விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் 12 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, ரஷித் கான் மட்டும் ஓரளவு தக்குப்பிடித்து 31 ரன்களைச் சேர்த்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது . டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஆளுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

இதில் மெக்குர்க் 20, பிரித்வி ஷா 7, அபிஷேக் போரெல் 15, ஷாய் ஹோப் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிஷப் பந்த் 16 ரன்களையும், சுமித் குமார் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பாக கீப்பிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இன்றைய போட்டியில் எங்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது, இதிலிருந்து நாங்கள் வலுவாக திரும்பி வருவது முக்கியம். இப்போட்டிக்கான விக்கெட் பேட்டிங்கிற்கு சரியாக இருந்தாலும், நாங்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்க்கும் போது அதற்கு ஆடுகளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னைப்பொறுத்தவரையில் இன்றைய போட்டியில் நாங்கள் இழந்த விக்கெட்டுகள் அனைத்தும் எங்களது மோசமான ஷாட் தேர்வினால் மட்டும் தான் என்று கூறுவேன்.

அதேசமயம் எதிரணி 89 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்தும் போது யாராவது ஒரு பந்துவீச்சாளர் இரட்டை ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே எந்த அணியாலும் வெற்றி குறித்து யோசிக்க முடியும். மற்றப்படி எப்போதும் சேஸிங் செய்யும் அணிக்கே அது வெற்றியைக் கொடுக்கும். நாங்கள் தற்போது இந்த சீசனில் பாதி போட்டிகளில் மட்டுமே விளையாடி மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளோம். இதனால் கடந்த இரண்டு சீசன்களைப் போலவே இனிவரும் 7 போட்டிகளில் 5 அல்லது 6 வெற்றிகளை பதிவுசெய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை