ரிஷப் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை விளையாடவைக்கலாம் - டேல் ஸ்டெயின்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4ஆவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது 37ஆவது வயதில் டி20 போட்டிகளில் தனது முதலாவது அரை சதத்தை அடித்து அசத்தியிருந்தார். அதேவேளையில் ரிஷப் பந்த் தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரில் யாரை உலகக்கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்யலாம் என்ற கேள்வி ஸ்டெயின்-யிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டேல் ஸ்டெயின் கூறுகையில், “தென் ஆப்ரிக்க தொடரில் ரிஷப் பந்திற்கு இதுவரை நான்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் அவர் பெரிய அளவில் ரன்களை குதிக்காமல் ஒரே தவறைத் திரும்பத் செய்கிறார்.
ஒரு நல்ல வீரர் என்பவர் தான் செய்யும் தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் பந்த் அப்படி செய்யவில்லை. அதேவேளையில் தினேஷ் கார்த்திக் தனது கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறார்.
இந்திய அணி எதிர்வரும் டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் பார்மில் இருக்கும் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் தற்போது ரிஷப் பந்தை விட தினேஷ் கார்த்திக் மிகவும் சிறப்பான பார்மில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
எனவே ரிஷப் பந்தினை தாண்டி தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் இடம் பெற வைக்கலாம் என்பதே எனது கருத்து” என்று கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு இன்றி தவித்து வந்த தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் போது மீண்டும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவேன் என்று சபதம் செய்திருந்தார்.
அதோடு நிச்சயம் அடுத்து இரண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்து தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.