விம்பிள்டன் போட்டியைக் காண நேரில் சென்ற ரவி சாஸ்திரி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அடுத்த மாதம் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடர் நடைபெற இன்னும் சில வாரங்கள் இருப்பதால், வீரர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள நேரத்தை பிர விளையாட்டு போட்டிகளை நேரில் சென்று ரசித்து வருகின்றனர்.
அந்த வகையில் டென்னிஸ் விளையாட்டின் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஸ்விஸ் நாட்டின் ரோஜர் ஃபெடரர், ஃபிரஞ்சின் ரிச்சர்ட் கஸ்கட்டை எதிர்கொள்ளவுள்ளார். இப்போட்டியைக் காண பலாயிரக்கணக்கான மக்கள் மைதானத்தில் திரண்டுள்ளனர்.
அதில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், இப்போட்டியைக் காண நேரில் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,“விம்பிள்டன் போட்டியைக் காண மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது நல்லது. இது ஒரு மிகப்பெரும் பாரம்பரியமிக்க விளையாட்டு. இப்போட்டி இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறவுள்ளது” என பதிவிட்டு தனது புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
ரவி சாஸ்திரியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த், யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகளிடையேயான போட்டியை நேரில் சென்ற ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.