இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது- டிம் சௌதி
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. இதில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் 165 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தை இன்று தொடரவுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிம் சௌதி கூறுகையில்,“நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டைக் கைப்பற்றியது எங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. ஏனெனில் முந்தைய நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாங்கள் இப்போட்டியை டிரா செய்யும் முடிவில் இருந்தோம்.
ஆனால் இங்கிலாந்து அணியை 275 ரன்களுக்குள் சுருட்டியதை அடுத்து எங்களுக்கு தற்போது மீண்டும் நம்பிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் 98 ஓவர்கள் உள்ளன. அதை சரியாகப் பயன்படுத்தினால் எங்களால் இங்கிலாந்து அணியை வீழ்த்தி போட்டியை கைப்பற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.