எல்எல்சி 2022: மணிப்பால் டைகர்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!

Updated: Tue, Sep 20 2022 13:27 IST
Gujarat Giants Beat Manipal Tigers By Two Wickets In Legends League Cricket (Image Source: Google)

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லக்னோவில் நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் மணிப்பால் டைகர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மணிப்பால் டைகர்ஸ் அணியில் சுக்லா, அஸ்னொதர், தைபு ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த முகமது கைஃப் - ஷுக்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் 24 ரன்களில் கைஃப் ஆட்டமிழக்க, 32 ரன்களோடு ஷுக்லா ஆட்டமிழந்தார். 

இறுதியில் கேப்டன் ஹர்பஜன் சிங் அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என 18 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மணிப்பால் டைகர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அசோக் டிண்டா, தில்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் வீரேந்திர சேவாக், திலகரத்னே தில்சன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த கெவின் ஓ பிரையன் - பார்த்தீவ் படேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

பின்னர் 23 ரன்களில் கெவின் ஓ பிரையனும், 34 ரன்களில் பார்த்தீவ் படேலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பால் டைகர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை