சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய ஃபிரான்ஸ் வீரர்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபிரான்ஸ் - ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஃபிரான்ஸ் அணியின் தொடக்க வீரர் கஸ்டவ் மெக்கியான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஃபிரான்ஸ் ஆணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய ஸ்விட்சர்லாந்து அணி தொடக்கம் முதலே சீரன இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபஹீம் நசிர் அரைசதம் கடந்தார்.
பின்னர் அவரும் 67 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்விட்சர்லாந்து அணியின் தோல்வியும் உறுதியானது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் அலி நையர் 16 பந்துகளில் 48 ரன்களைச் சேர்த்து, ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ஸ்விட்சர்லாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக 18 வயதில் (18 வருடங்கள், 280 நாள்கள்) சர்வதேச சதம் அடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஃபிரான்ஸ் அணியின் தொடக்க வீரர் கஸ்டவ் மெக்கியான். 61 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார்.
இதற்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா ஸஸாய், கடந்த 2019ஆம் ஆண்டு 20 வயதில் (20வருடங்கள் 337 நாள்களில்) அயர்லாந்துக்கு எதிராக 62 பந்துகளில் 162 ரன்கள் அடித்ததே குறைந்த வயதில் அடித்த சர்வதேச சதமாக இருந்தது. தற்போது இச்சாதனையை ஃபிரான்ஸின் கஸ்டவ் மெக்கியான் முறியடித்துள்ளார்.