நான் இந்திய அணிக்கு தேர்வாக இவர்கள் தான் காரணம் - வெங்கடேஷ் ஐயர்!

Updated: Sun, Jan 23 2022 12:35 IST
Had it Not Been For KKR, I Wouldn’t Have Been Anywhere - Venkatesh Iyer (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இளம் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் கொல்கத்தா அடுத்தடுத்த தோல்விகளால் அதல பாதாளத்தில் தள்ளாடியது. ஆனால் துபாயில் நடைபெற்ற 2ஆவது பகுதியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது.

துபாயில் நடந்த 2ஆவது பகுதியின் போது கொல்கத்தாவுக்கு அறிமுகமாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே செயல்பட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு செல்ல மிகவும் முக்கிய பங்காற்றினார் என்று கூறலாம். 

ஐபிஎல் 2021 தொடரில் 370 ரன்களை எடுத்தது மட்டுமல்லாமல் 3 முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்ததால் கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.

இந்நிலையில் இந்திய அணியில் விளையாட மிகவும் உதவிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெங்கடேஷ் ஐயர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்“கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய நன்றிகள். அந்த அணியில் மட்டும் நான் விளையாடாமல் இருந்திருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. அப்போது நடந்த சையீத் முஷ்டாக் அலி கோப்பையில் நான் சுமாராகவே விளையாடினேன்.

இருப்பினும் ஒரு போட்டியில் சிறப்பாக பினிஷிங் செய்திருந்தேன். அதன் காரணமாக அப்போது நடந்த ஏலத்தில் முதல் 2 சுற்றில் தேர்வு செய்யப்படாத என்னை கடைசி சுற்றில் கொல்கத்தா அணி எடுத்தது. அந்த ஏலத்தில் கொல்கத்தா அணி நிர்வாகம் மட்டும் கடைசி நேரத்தில் தன்னை எடுக்காமல் போயிருந்தால் இந்நேரம் நான் எங்கே இருப்பேன் என்று தெரியாது.

எனக்குள் இருந்த திறமையை கேகேஆர் தான் வெளிக்கொண்டு வந்தது. எனக்குள் இருந்த திறமையாலேயே நான் இந்த அளவுக்கு முன்னேறி உள்ளேன் என்று கூறினால் அது தவறு. உண்மையில் அந்த அணிதான் நான் மகிழ்ச்சி அடையக்கூடிய எனக்குள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தது. இந்தியாவில் நடந்த ஐபிஎல் 2021 தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. 

ஆனால் துபாயில் நடந்த 2ஆவது பகுதியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட கதை அடுத்த 20 – 30வருடங்களுக்கு பேசப்படும். இது ஒரு மிகச் சிறப்பு வாய்ந்த பயணமாகும்” என்று தெரிவித்தார். 

கடந்த சீசனில் அபாரமாக செயல்பட்ட இவரின் திறமையை உணர்ந்த கொல்கத்தா அணி நிர்வாகம் ஐபிஎல் 2022 தொடருக்காக இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக் போன்ற பல நட்சத்திர வீரர்களை கூட நம்பாமல் இளம் வீரராக உள்ள வெங்கடேஷ் ஐயரை 8 கோடி ரூபாய்களுக்கு தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை