இந்திய ஏ அணியில் ஹனுமா விஹாரி - பிசிசிஐ

Updated: Fri, Nov 12 2021 18:40 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில், 2ஆவது டெஸ்ட் மும்பையில் தொடங்குகின்றன. 

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 2ஆவது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி ஆகியோர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். விஹாரி, ஷர்துல் தாக்குருக்கு இந்திய அணியில் இடமில்லை. ரோஹித் சர்மாவும் முதல் டெஸ்டில் விராட் கோலியும் இல்லாத நிலையில் இந்திய அணியில் விஹாரி நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். 

ஆனால் எந்தவொரு காரணமும் இன்றி விஹாரி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2021 ஜனவரி சிட்னி டெஸ்டில் காலில் காயம் ஏற்பட்டபோதும் பவுன்சர் பந்துகளை உடம்பில் தாங்கிக்கொண்டு அஸ்வினுடன் இணைந்து கடுமையாகப் போராடி டெஸ்டை டிரா செய்து கொடுத்தார்.

அப்போட்டியில் 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் எடுத்தார். காயத்துடன் 40 ஓவர்கள் வரை விளையாடி அணியைக் காப்பாற்றினார். எனினும் அந்த டெஸ்டுக்குப் பிறகு விஹாரி வேறெந்த டெஸ்டுக்கும் தேர்வாகவில்லை. இப்போது கோலி, ரோஹித் அணியில் இல்லாதபோதும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

சிட்னி போராட்டத்தை இந்திய அணி நிர்வாகம் மறந்துவிட்டதா எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் விஹாரி சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 

Also Read: T20 World Cup 2021

இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. நவம்பர் 23-ல் இத்தொடர் தொடங்குகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை