ஆசிய கோப்பை 2022: வருங்காலத்தில் இவர் தோனியைப் போன்று வருவார் - ஹர்பஜன் சிங்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஆசிய கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று முடிந்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது புவனேஸ்வர் குமார் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக 147 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை மீதம் வைத்திருந்த வேளையில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் 17 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து 33 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஹார்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஹார்டிக் பாண்டியா கேப்டனாக வேண்டும். அவர் கேப்டனாக நிச்சயம் வருவார் என்று நினைக்கிறேன். அவர் தற்போது மீண்டும் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்துள்ளது மிகச் சிறப்பாக உள்ளது. அவர் தற்போது எம்.எஸ் தோனி போன்ற ஒரு வீரராக மாறியுள்ளார். அதோடு மைதானத்தில் மிகவும் அமைதியாக இருக்கிறார். பேட்டிங்கிலும் அதிரடி காட்டுகிறார். நிச்சயம் அவர் இந்திய அணியின் கேப்டனாவதை நான் எதிர்பார்க்கிறேன்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் வெளிப்படுத்திய மெச்சூரிட்டி மிக சிறப்பாக இருந்தது. என்னை பொறுத்தவரை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட தயாராகி விட்டார் என்றும் தோனியை போல அவர் வருவார்” என்றும் பாராட்டியுள்ளார்.