நிச்சயம் நீங்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பீர்கள் - சஹாலுக்கு ஆதரவு தெரிவித்த ஹர்பஜன்!

Updated: Fri, Oct 08 2021 12:03 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில தினங்களில் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியில் குறிப்பிட்ட சில வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்ட சில வீரர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதால் இனி அந்த அணியில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படாது என்று உறுதியாகியுள்ளது. ஆனாலும் இன்றளவும் இந்திய அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த விமர்சனங்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். 

இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை தான் இந்திய அணிக்கு கொடுத்துள்ளீர்கள். அதை தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் சரியான வேகத்தில் தொடர்ந்து பந்துவீச வேண்டும். மிகவும் ஸ்லோவாக பந்துவீச வேண்டாம். எனக்கு நிச்சயம் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவீர்கள். நீங்கள் ஒரு சாம்பியன் பவுலர்” என்று சஹாலுக்கு ஆதரவாக தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் சாஹல் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவ்வேளையில் தற்போது ராகுல் சாகர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதேவேளையில் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சற்று மந்தமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹல் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த சிறப்பான பவுலிங்கை கண்ட பலரும் அவரை இந்திய அணியில் இணைத்து இருக்கலாம் என்பது போன்ற கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை