இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் ஹர்திக்கால் அணியில் இடம்பிடிக்க முடியாது - சரன்தீப் சிங் வார்னிங்!

Updated: Sat, May 15 2021 16:42 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பளிக்காதது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது. 

இந்நிலையில் அவரால் பந்து வீச முடியாததே, அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவருகின்றனர். இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா மீண்டும் பந்து வீச முடியாமல் போனால் அவரால் இனி இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரன்தீப்சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சரன்தீப் சிங்,“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்காதது ஏன்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. முதுகு வலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள பிறகு அவரால் வழக்கம் போல் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. இந்திய அணிக்காக ஆடும் லெவனில் அவர் இடம் பெறும் போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்களும், 20 ஓவர் போட்டியில் 4 ஓவர்களும் பந்து வீசியாக வேண்டும். 

ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அவர் இந்திய அணியில் விளையாட முடியாது. அவர் பந்து வீசவில்லை என்றால் அணியில் அவரால் இடம் பெற முடியாது. இதனால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை சேர்க்க வேண்டியுள்ளது. சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேனை வெளியே உட்கார வைக்க வேண்டி இருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இதை பார்த்தோம்.

அணியில் இப்போது வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல் போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருக்கிறார்கள். காயத்தில் இருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியிருக்கிறார். ஷர்துல் தாகூர் கூட ஆல்-ரவுண்டராக ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஒரு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை என்றால் அந்த பணியை இவர்களால் செய்ய முடியும்.

பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேன். ஷேவாக் இந்திய அணிக்காக எப்படி ஆடினாரோ அதே போன்று இவரால் ஆட முடியும். இளம் வீரரான அவரை இப்போதே ஓரங்கட்ட கூடாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு நீக்கப்பட்டதில் இருந்து முதல்தர கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அத்துடன் தனது பேட்டிங்கில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளையும் சரி செய்துள்ளார். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை