IRE vs IND: வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா!
ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. அதன்படி நேற்று துவங்கிய இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதித்து துவங்கியதால் போட்டி இரு அணிகளுக்குமே 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக தீபக் ஹூடா இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 47 ரன்களை குவித்தார்.
மேலும் துவக்க வீரர் இஷான் கிஷன் 26 ரன்களும், கேப்டன் ஹார்டிக் பாண்டியா 24 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் ஹார்திக் பாண்டியா முதல் சர்வதேச போட்டியிலேயே தனது கேப்டன்ஷிப்பை வெற்றியுடன் துவங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய அவர், “இந்தத் தொடரில் வெற்றியுடன் துவங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அணியாக இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியம் அது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
உம்ரான் மாலிக் ஐபிஎல் கிரிக்கெட்டில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சிறிது தடுமாறி உள்ளார். அவர் ஒரு ஓவர் வீசிய பிறகு நான் அவரிடம் சென்று பேசினேன்.
புது பந்தினை விட உம்ரான் மாலிக் பழைய பந்தில் இன்னும் கூடுதல் சாதகமாக இருப்பார் என்று நம்புகிறேன். அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் எங்களது அணியின் முக்கிய பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர்.
போட்டி 12 ஓவர்கள் மட்டுமே நடைபெற்றதால் உம்ரான் மாலிக்கிற்கு ஒரு ஓவருக்கு மேல் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அடுத்த போட்டியில் அவருக்கு முழு ஓவர்களையும் வழங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.