ஹர்திக்கை கேப்டனாக நியமித்தது குறித்து வாய்திறந்த குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Thu, Mar 10 2022 15:55 IST
Image Source: Google

இந்தியாவில் 15ஆவது ஐபிஎல் சீசனானது வரும் 26ஆம் தேதி துவங்கி மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமின்றி மெகா ஏலத்திலும் கலந்து கொண்ட இந்த இரு புதிய அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

அதன்படி லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஹர்டிக் பண்டியா மும்பை அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் விளையாடி வருவதால் அவரை மும்பை அணி தங்களது அணியில் இருந்து விடுவித்தது.

இதன் காரணமாக பாண்டியா மெகா ஏலத்திற்கு செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்து தங்கள் அணிக்கு கேப்டனாக நியமித்தது. அதோடு அந்த அணியில் நேரடியாகத் தக்கவைக்கப்பட்ட மூன்று வீரர்களாக பாண்டியாவுடன் சேர்ந்து ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குஜராத் அணிக்கு கேப்டனாக பாண்டியாவை ஏன் நியமித்தோம் என்பது குறித்து குஜராத் அணியின் நிர்வாக இயக்குனர் விக்ரம் சோலங்கி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஒரு வெற்றிகரமான கேப்டனாக பாண்டியா வருவதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் தோனி, கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களுடன் அவர் நெருங்கி விளையாடி உள்ளதால் நிச்சயம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட திறன்களை அவர் படிப்படியாக இந்த ஐபிஎல் தொடரில் வெளிக்கொணர்ந்து ஒரு சிறந்த கேப்டனாக மாறுவார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. எனவே பாண்டியாவிற்கு உண்டான முழு ஆதரவையும் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

அதோடு மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகவே பந்துவீச கஷ்டப்பட்டு வரும் அவர் தற்போது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கடுமையாக உழைத்து வருகிறார். நிச்சயம் அவர் இந்த ஐபிஎல் தொடரில் எங்கள் அணியின் வெற்றிகரமான கேப்டனாக மாறுவார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை