ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த பிசிசிஐ!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக சொதப்பி, புள்ளிப் பட்டியலின் கடைசி இரண்டு இடங்களில் நீடித்து வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் அபாரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணி 7 போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
குஜராத் அணி இப்படி அதிரடி காட்ட முக்கிய காரணம், அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். டாப் ஆர்டரில் களமிறங்கி பேட்டிங்களில் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். அதேபோல், பந்துவீச்சிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, தொடர்ச்சியாக 137+ வேகத்தில் பந்துவீசி வருகிறார். பீல்டிங்கிலும் அபாரம்தான்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு திடீரென்று காயம் ஏற்பட்டுள்ளது. அவ்வபோது கைகளை பிடித்துக்கொண்டுதான் களத்தில் நிற்கின்றார். இப்படி காயத்தை எதிர்கொண்டு வருவதால் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இவர் களமிறங்கவே இல்லை. இதனைத் தொடர்ந்து கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங் மட்டுமே செய்தார். பந்துவீசவில்லை. அதுமட்டுமல்ல பீல்டிங் செய்தபோது கூட மூச்சு வாங்கிக்கொண்டேதான் நின்றிருந்தார்.
இவருக்கு 2019ஆம் ஆண்டில் முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்து தொடர்ந்து பேட்டிங் மட்டுமே களமிறங்கி வந்தார். பந்துவீச முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த உடனே 6 மாதங்கள்வரை ஓய்வுக்கு சென்றார். அப்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர், இலங்கைக்கு எதிரான தொடரின்போது பிசிசிஐ இவருக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், ஹர்திக் பாண்டியாவோ, “என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கை வரும்போது, நானே வருகிறேன்” என கெத்தாக பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்துதான் வெங்கடேஷ் ஐயருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்தது. இதனால் பதறிப்போன ஹர்திக் பாண்டியா உடனே தீவிர பயிற்சி மேற்கொண்டு பிட்னஸை நிரூபித்து, தற்போது ஐபிஎலில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் பெரிதானால், அடுத்த 6 மாதங்கள்வரை ஓய்வுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால், கேப்டன் பதவியிலிருந்து விலகி சில போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது நல்லது என பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாம். இதனை மதிக்காமல் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், அவருக்கு மீண்டும் பிட்னஸ் டெஸ்ட் வைத்து, ஐபிஎலிலில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.