தோனி தன்னை மெருகேற்றினார் - ஹர்திக் பாண்டியா

Updated: Tue, Jun 07 2022 15:26 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி எப்பேர்பட்ட வளர்ச்சி அடைந்தது என்பதை நாம் கண்கூடாக கண்டுள்ளோம். அவரது தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டிற்கு அறிமுகமான பல வீரர்கள் தற்போது இந்திய அணியில் முன்னணி வீரராக திகழ்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், தவான் போன்றவர்களைக் குறிப்பிடலாம். தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக பார்க்கப்பட்டு வருகிறார்.

அதேபோன்று தோனியின் தலைமையில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தபோது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அப்போதுதான் ஐபிஎல் தொடரில் கலக்கிக் கொண்டிருக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கினார்.

ஆனாலும் ஹர்திக் பாண்டியா ஆரம்பித்த காலத்தில் அவரது பார்ம் மிகச் சிறப்பாக இல்லை. ஏனெனில் 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமான பாண்டியா தான் வீசிய முதல் ஓவரிலேயே 21 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனாலும் அவருக்கு மீண்டும் அந்த போட்டியில் 2 ஓவர்கள் பந்துவீச வாய்ப்பு  கொடுத்தார் தோனி. அதற்கேற்றார்போல் பாண்டியாவும் அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த அந்த தொடரில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனாலும் அந்த தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் தோனியிடம் இருந்து கிடைத்ததாக தற்போது ஹார்டிக் பாண்டியா பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து பேசிய அவர், “நான் அறிமுகப் போட்டியில் முதல் ஓவரிலேயே 21 ரன்களை வழங்கியதால் மீண்டும் எனக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தேன். அதேபோன்று இந்த போட்டியோடு எனது கரியரும் முடிந்துவிடும் என்று நினைத்தேன்.

ஆனால் தோனி என்னை நம்பி மீண்டும் அதே போட்டியில் பந்துவீச வைத்தார். அதனைத் தொடர்ந்து நான் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையிலும் என்னை நம்பி உலக கோப்பை தொடரிலும் தேர்வு செய்து விளையாட வைத்தார். நான் முதன் முதலாக 3 போட்டிகளில் விளையாடிய பின்னர் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் நிச்சயம் உலகக் கோப்பை தொடருக்கு உன்னை தேர்வு செய்வேன் என்று தோனி என் மீது ஆதரவு காண்பித்தார்.

என்னிடம் இருந்த திறமையை கணித்த அவர் என்னை மெருகேற்றினார். அவரது தொடர்ச்சியான ஆதரவினாலேயே என்னால் அடுத்தடுத்து இந்திய அணிகள் சிறப்பாக செயல்பட முடிந்தது” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை