சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!

Updated: Tue, Jun 11 2024 22:40 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைதார். இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இஃப்திகார் அஹ்மத் நீக்கப்பட்டு சைம் அயூப் சேர்க்கப்பட்டார். 

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரோன் ஜான்சன் முதலிரண்டு பந்திகளிலுமே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கி வைத்தார். அதேபோம் மற்றொரு தொடக்க வீரரான நவ்நீத் தலிவாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய நிலையில், 4 ரன்களோடு விக்கெட்டையும் இழந்தார். 

அதன்பின் ஆரோன் ஜான்சன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திவரும் நிலையில், மறுபக்கம் களமிறங்கிய பிரகத் சிங் 2 ரன்களிலும், நிக்கோலஸ் கிர்டன் ஒரு ரன்னிலும், ஸ்ரேயாஸ் மொவ்வா 2 ரன்களிலும், ரவிந்தர்பால் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின்னர் அரைசதம் கடந்த நிலையில் ஆரோன் ஜான்சன் 52 ரன்களுக்கு விக்கெட்ட இழக்க, இறுதியில் கலீம் சனா 13 ரன்களையும், திலன் ஹெய்லிகர் 9 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கனடா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பாகிஸ்தான் வீரர் மற்றும் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். 

அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் (டி20ஐ)

  • ரஷித் கான் (ஆஃப்கானிஸ்தான்) - 52 போட்டிகள்
  • வநிந்து ஹசரங்கா (இலங்கை) - 63 போட்டிகள்
  • ஹாரிஸ் ராவுஃப் (பாகிஸ்தான்) - 71 போட்டிகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை