நெதர்லாந்து வீரரின் முகத்தை பதம் பார்த்த ராவுஃப் பவுன்சர்; வைரல் காணொளி!

டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக கடைசி பந்துவரை போராடி தோற்றது. குறிப்பாக, கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி வாய்ப்பு இருந்தும் பாகிஸ்தான் அணி தோற்றதுதான், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வீரர்கள் சிலர் களத்தில் கண்ணீர் விட்டதையும் பார்த்தோம்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கியது. முதல் இரண்டு போட்டிகளில், குறிப்பாக ஜிம்பாப்வேக்கு எதிராக தோற்றதால், இன்று நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பௌலர்கள் உக்கிரமாக பந்துவீசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் பௌலர்கள் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீச ஆரம்பித்தார்கள். பெர்த் மைதானத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் என அனைத்தும் இருந்தது. ஷாஹீ்ன் அஃப்ரிடி, நஷிம் ஷா, ஹரிஸ் ராவுஃப் ஆகியோர் இதனை பயன்படுத்தி நெதர்லாந்து பேட்டர்களை கறதவிட்டனர்.
குறிப்பாக 5.5 ஆவது ஓவரில் ஹரிஸ் ராவுஃப் வீசிய பவுன்சரை பாஸ் டி லிடி எதிர்கொண்டபோது, பந்து ஹெல்மட்டிற்குள் புகுந்து கண்களுக்குள் கீழ் பட்டது. லிடி உடனே கீழே சாய்ந்தார். அவரது கண்களுக்கு கீழ் ரத்தம் வந்தது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் உடனடியாக பெவிலியன் திரும்பினார். இது அந்து அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது.
ஏனெனில் அடுத்து களமிறங்கிய மற்ற நெதர்லாந்து பேட்டர்களும் சிறப்பாக செயல்படவில்லை. அதிகபட்சமாக ஆக்கர்மேன் 27, எட்வர்ட்ஸ் 15 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் சேர்த்ததால், நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 91/9 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் சதாப் கான் 3 விக்கெட்களை சாய்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், ஷான் மசூத் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, முகமது ரிஸ்வானின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றிபெற்று அசத்தியது.