பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பை ஏற்படுத்திய ஹசன் அலி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான வீரர்களின் வரைவு கடந்த 12ஆஅம் தேதி நடந்தது. அதன் முடிவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஆடும் பாகிஸ்தான் வீரரான ஹசன் அலியும் கலந்துகொண்டார்.
ஹசன் அலியை இஸ்லாமாபாத் யுனைடெட் அணி தக்கவைத்தது. அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பத்திரிக்கையாளர் ஹசன் அலியிடம் கேள்வி கேட்க, அப்போது குறுக்கிட்ட ஹசன் அலி, அவரது கேள்விக்கு தன்னால் பதில் சொல்லமுடியாது என்றும், வேறு யாராவது கேள்வி கேட்குமாறும் கூறினார்.
இதையடுத்து அந்த பத்திரிக்கையாளர் தனது கேள்விக்கு ஹசன் அலியிடம் இருந்து பதிலை எதிர்பார்க்க, ஹசன் அலியோ மறுக்க, அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை சேர்ந்தவர்கள், அந்த வாக்குவாதத்தை முடித்துவைத்தனர்.
அந்த பத்திரிக்கையாளர் தனது கேள்விக்கு பதிலளிக்குமாறு ஹசன் அலியை வலியுறுத்த, அவரது கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஹசன் அலி, முதலில் நீங்கள் ட்விட்டரில் நல்லதை எழுதுங்கள். பிறகு உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்.. சரியா.. ஒருவரது தனிப்பட்ட விஷயத்தில் நீங்கள் தலையிட முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால், உங்களை கேள்வி கேட்க முடியாமல் தடுக்க முடியாது. ஆனால் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்று காட்டமாக பேசினார் ஹசன் அலி.
அந்த பத்திரிக்கையாளர் ஹசன் அலியை பற்றி கடந்த காலத்தில் எழுதிய கருத்தின் விளைவாகத்தான் அவரிடம் ஹசன் அலி இப்படி நடந்துகொண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.