அஸ்வினை தலைசிறந்த வீரராக குறிப்பிட முடியாது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட்டர்களில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்து மிக குறைந்த இன்னிங்ஸ்களில் 50, 100, 150, 200, 300, 350, 400 விக்கெட்களை கைப்பற்றியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
ஆனால் அஸ்வினை தன்னால் எல்லா காலத்திலும் சிறந்த ஒரு வீரராக குறிப்பிட முடியாது என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனியார் விளையாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த மஞ்ச்ரேக்கர்,“ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் ‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என மக்கள் அஸ்வினை பற்றி பேசத் தொடங்கும் போது, எனக்கு அதை ஏற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன.
அஸ்வினிடம் உள்ள ஒரு அடிப்படை பிரச்னை என்னவென்றால் சேனா (SENA) என்று சொல்லக்கூடிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்திய வீரர்கள் இங்கு திணறலை சந்திக்கின்றனர். ஆச்சரியம் தரும் வகையில் மேற்கண்ட இந்த 4 நாடுகளில் அஸ்வின் ஒரு முறை கூட 5 விக்கெட் வீழ்த்திய தில்லை.
அஸ்வின் உள்ளூர் பிட்ச்களில் சிறப்பாக விளையாட கூடியவர். அவருக்கு ஏற்ற அல்லது உகந்த ஆடுகளங்களில் விளையாடும் போது அவர் சிறந்த வீரர் தான். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தொடர் முழுதும் விக்கெட் வீழ்த்துவதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நிகராக ரவீந்திர ஜடேஜா முன்னேறியிருக்கிறார்.
எனவே பிற வீரர்களை கடந்து ஒரு வீரராக என்னால் அஸ்வினை பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் அக்ஸர் படேல் அஸ்வினைக் காட்டிலும் இந்த பிட்ச்களில் கூடுதல் விக்கெட்களை எடுத்திருக்கிறார். எனவே தான் அஸ்வினை என்னால் எப்போதும் சிறந்த வீரராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.