ஷர்துல் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலிப்பார் - பரத் அருண் நம்பிக்கை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடைபெறுகிறது.
இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலிப்பார் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பரத் அருண், “ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அதனை தொடர்ந்து நடக்க இருக்கின்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட வீரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.
ஆனால் ஷர்துல் தாகூர் இடம் பெற்றுள்ளார், நிச்சயமாக ஹர்திக் பாண்டியா இடத்தை தாகூர் பூர்த்தி செய்வார். அடிப்படையில் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர். 2018 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா தனது அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அதன் பின்னரே ஹர்திக் பாண்டியா பந்து வீசுவதில் சிரமப்படுகிறார். அந்த சிகிச்சைக்கு பிறகு அவ்வளவு எளிதாக யாரும் பந்துவீசி விட முடியாது. அவர் மீண்டும் சிறப்பாக பந்து வீச குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.
எனினும் ஹர்திக் பாண்டியா சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் களம் இறங்கி மிக சிறப்பாகவே ஐக்கிய அரபு நாடுகளில் மும்பை அணிக்காக விளையாடினார். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடிய விளையாடினார். அதனைத் தொடர்ந்து தற்போது நடந்த பாதி ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடினார்.
எனினும் அவர் அவ்வளவாக பந்து வீசவில்லை என்பது குறிப்பிடதக்கது. முன்னர் குறிப்பிட்டது போல் அவர் பழையபடி பந்துவீச இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை.
ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்புவதற்கு சிவம் டியூபே மற்றும் விஜய் சங்கர் ஆகியோரை நாங்கள் விளையாட வைத்தோம். ஆனால் அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் தாகூர் சென்ற ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் மிக சிறப்பாக விளையாடினார். 67 ரன்கள் எடுத்தும் சரி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதிலும் சரி மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக தற்பொழுது உருமாறி இருக்கிறார்.
குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மிக சிறப்பாக அவர் பந்து வீசியது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நிச்சயமாக அவரால் பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் சரி அணிக்கு தன்னுடைய முழு பங்களிப்பை அளிக்க முடியும்.
எனவே அவர் மீது நம்பிக்கை வைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. நிச்சயமாக அவர் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தார்.