ஐபிஎல் 2022: ஷிவம் துபேவை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!
15ஆவது ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 19.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது, போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய சென்னை அணியின் சிவம் துபே, ஒரே ஓவரில் 25 ரன்கள் விட்டுகொடுத்தது தான் சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் சிவம் துபேவை முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் சிவம் துபேவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய கவாஸ்கர்,“லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிவம் துபே வீசியது போன்று யார் வீசினாலும் அதற்கு எதிரணி பேட்ஸ்மேனிடம் இருந்து நிச்சயம் இது போன்ற தண்டனை கிடைக்கும். ஒரு ஓவர் கூட விசாதவரை திடீரென அழைத்து போட்டியின் முக்கியமான ஓவரான 19ஆவது ஓவரை வீச சொல்வதும் ஏற்புடையது அல்ல தான்.
ஆனால், சிவம் துபே வீசிய அந்த ஓவரில் ஒரு பந்துகூட சரியான லென்த்தில் வீசப்படவில்லை. ஈரமாக உள்ள ஆடுகளத்தில் சிவம் துபே வீசியது போன்ற பந்துவீச்சு முறை எடுபடாது. அவர் ஸ்லோவர் பந்துகள் வீசியிருந்தால் கூட அது சென்னை அணிக்கு கொஞ்சம் பயனளித்திருக்கும்” என்று தெரிவித்தார்.