ஹீத் ஸ்ட்ரீக் பற்றி வெளியான செய்தி தவறானது - ஹென்றி ஒலங்கா விளக்கம்!

Updated: Wed, Aug 23 2023 13:53 IST
Image Source: Google

கிரிக்கெட் உலகில் 90களில் ஜிம்பாப்வே மிகவும் ஒரு முக்கியமான அணியாக வலம் வந்தது. 99 உலகக்கோப்பையில் இந்திய அணியை ஜிம்பாப்வே வீழ்த்தியும் இருந்தது. இதுவெல்லாம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் இருக்கக்கூடிய விஷயம். வீழ்ந்த அந்தப் போட்டியில் ஹென்றி ஓலங்காவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஜிம்பாப்வே அணியை அன்று எடுத்துக் கொண்டால் ஆன்ட்டி ஃபிளவர், கிராண்ட் ஃபிளவர், நீல் ஜான்சன், ஹென்றி ஓலங்கா என இவர்களோடு சேர்த்து வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக இருந்த ஹீத் ஸ்ட்ரீக் பெயர் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டுக்கு தலைமை தாங்கியவர் இவர்.

சிறந்த பந்துவீச்சாளரான இவர் அணிக்கு கடைசி கட்டங்களில் பேட்டிங்கும் செய்யக்கூடியவர். மேலும் சில காலம் ஜிம்பாப்வே அணியை வழிநடத்தவும் செய்திருக்கிறார். தற்பொழுது 47 வயதாகும் இவர் புற்றுநோயால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் இன்று அவர் இறந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்தது. 

இந்த காரணத்தால் பலரும் அவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து பதிவிட்டார்கள். காலையிலிருந்து சமூக வலைதளங்களில் இந்த செய்தி பலராலும் பகிரப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இது தவறான பரப்பப்பட்ட பொய் செய்தி என்றும், அவர் உயிரோடு இருக்கிறார் என்றும், அவருடன் அணியில் இணைந்து விளையாடிய சக வீரர் ஹென்றி ஓலங்கா வாட்ஸ் அப் மூலம் உரையாடி தெரியப்படுத்தி இருக்கிறார்.

 

இதுகுறித்து ஹென்றி ஓலங்கா கூறும்பொழுது “அவர் மறைவு பற்றி வரக்கூடிய செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட பொய்ச் செய்திகள். நான் நேரடியாக அவரிடம் பேசினேன். அவர் இது தொடர்பாக மூன்றாவது நடுவரிடம் அப்பில் செய்துள்ளதாக கூறியிருக்கிறார்” என்று நகைச்சுவையாக தெரிவித்து இருக்கிறார். 

மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் கூறும்பொழுது “இது முழுக்க முழுக்க வதந்தி மற்றும் பொய் செய்தியாகும். நான் உயிருடன் நலமோடு இருக்கிறேன். இப்படியான செய்திகள் நாம் எதையும் சரி பார்க்காத காரணத்தால் பரவுகிறது என்று நினைக்கிறேன். நான் இதை அறிந்து மிகவும் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறேன். நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். நான் இந்த செய்தியால் காயப்பட்டு உள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை