WI vs ENG, 5th T20I: ஹோல்டர் ஹாட்ரிக்கில் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் முடிவடைந்துள்ளது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது.
4 டி20 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமனில் இருந்தன. கடைசி டி20 ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
இதில் கேப்டன் பொலார்ட் 25 பந்துகளில் 41 ரன்களும் ரோவ்மன் பாவல் 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 35 ரன்களும் எடுத்தார்கள். கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள் கிடைத்தன.
இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 8, டாம் பாண்டன் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
பின்னர் அவரும் 55 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறக்கிய வீரர்கள் ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ஜேசன் ஹோல்டர் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் டி20 தொடரை 3-2 என வென்றது வெஸ்ட் இண்டீஸ்அணி.
மேலும் இத்தொடர் முழுவதும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.