NED vs WI, 1st ODI: ஷாய் ஹோப் சதம்; நெதர்லாந்தை வீழ்த்தி விண்டீஸ் வெற்றி!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஆம்ஸ்டெல்வீனில் இன்று தொடங்கியது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜிட் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விக்ரம்ஜித் சிங் அரைசதம் அடிப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் 47 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முசா அஹ்மத் 13 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த மேக்ஸ் ஓடவுட்டும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் வந்த அறிமுக தேஜா நிடமானுரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் 45 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தேஜா நிடமானுரு 51 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகில் ஹொசைன், கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் - சமாரா ப்ரூக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 60 ரன்கள் எடுத்திருந்த ப்ரூக்ஸ் ஆட்டமிழக்க, அடுத்துவந்த பொன்னர் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 7 ரன்களோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஷாய் ஹோப் சதம்விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய வந்த பிரெண்டன் கிங் அரைசதம் அடித்தார்.
இதன்மூலம் 43.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாய் ஹோப் 119 ரன்களுடனும், பிரெண்டன் கிங் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.