ஒருநாள் & டி20 அணிக்கு அஸ்வின் தேவையில்லை - மஞ்ச்ரேக்கர் விமர்சனம்!

Updated: Sat, Jan 22 2022 18:18 IST
'Hopefully, India Will Realize He is Not an Impact Spinner'-Sanjay Manjrekar (Image Source: Google)

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வருகிறார் அஸ்வின். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் முழுமையாக ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2017 ஜூனில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார் அஸ்வின். 35 வயது அஸ்வின் 2010 முதல் இதுவரை 113 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. மேலும் இப்போட்டிகளில் அஸ்வின் பந்துவீசியிருப்பது விமர்சனங்களை வரவழைத்துள்ளது. 

இந்நிலையில் அஸ்வின் குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். இந்திய அணியின் வெள்ளைப் பந்துத் திட்டங்களில் காரணமே இல்லாமல் உள்ளே நுழைந்துள்ளார் அஸ்வின். மீண்டும் அணிக்குள் நுழைவதற்குப் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. ஆனால் சிந்தனைப் போக்கு மாறிவிட்டது. 

எனவே அவர் இந்திய வெள்ளைப் பந்து அணியில் மீண்டும் இடம்பிடித்துவிட்டார். இந்தியாவுக்குத் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுழற்பந்து வீச்சாளர் அவர் இல்லை என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள். நடு ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்த காலத்துக்கு இந்தியா மீண்டும் திரும்பவேண்டும். 

இந்தியாவிடம் உள்ள தற்போதைய சுழற்பந்து வீச்சு சிறந்ததாக இல்லை. சஹாலின் திறமையும் குறைந்து கொண்டு வருகிறது. நீண்ட காலத்துக்கு இந்தச் சுழற்பந்து வீச்சு பொருத்தமாக இருக்காது. குல்தீப் யாதவை மீண்டும் தேர்வு செய்யவேண்டும். எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்த அனுபவம் அவரிடம் உள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை