தோனியிடம் இதற்காக நான் மன்னிப்பு கோரினேன் - சோயிப் அக்தர்!

Updated: Fri, Aug 11 2023 22:21 IST
Image Source: Google

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நாட்டை வேகப்பந்துவீச்சாளர்களின் தொழிற்சாலை என்று கூறுவார்கள். அந்த அணிக்காக விளையாடி சோபிக்காத வேகப்பந்துவீச்சாளர்கள் கூட, களத்தில் பார்க்கும் பொழுது அச்சுறுத்தும் படி இருப்பார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சில் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் மிகவும் முதன்மையானவர்கள். இவர்கள் வேகத்துடன் ஸ்விங்கையும் கொண்டவர்கள். தனிப்பட்ட பந்துவீச்சு புத்திசாலித்தனத்துடன் இருந்தவர்கள்.

இவர்களுக்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டிலும் வேகப்பந்து வீச்சில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த, ஒரு கவர்ச்சியான வேகப்பந்துவீச்சாளராக வந்தவர் சோயிப் அக்தர். பவுண்டரி எல்லைக்கு பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும் இவரது பந்துவீச்சு ஓட்டம் பார்க்கும் போதே பேட்ஸ்மேனின் பாதி நம்பிக்கையை இழந்து விடுவார். 

பிறகு அதிவேகத்தால் பேட்ஸ்மேனின் மீதி நம்பிக்கையையும் சீர்குலைத்து விடுவார். உலகின் அதிவேகப் வந்து வீச்சாளராக மணிக்கு 161 கிலோமீட்டர் மேல் வீசி இருக்கிறார். இவர் சமீபத்தில் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் ஒன்றை வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சோயிப் அக்தர், “நான் 2006 பைசலாபாத் டெஸ்ட் போட்டியில் எட்டு ஒன்பது ஓவர்கள் கொண்ட நீண்ட ஸ்பெல் வீசினேன். அப்பொழுது தோனி சதம் அடித்து களத்தில் நின்றிருந்தார். அந்தச் சமயத்தில் நான் அவருக்கு வேண்டுமென்றே ஒரு பீமர் பந்து வீசினேன். பிறகு அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

இதுதான் என்னுடைய வாழ்க்கையில் நான் முதல்முறையாக வேண்டும் என்றே ஒரு பேட்ஸ்மேனுக்கு பீமர் பந்து வீசியது. நான் அப்படி செய்திருக்கவே கூடாது. நான் இதற்காக மிகவும் வருந்தினேன். மகேந்திர சிங் தோனி மிகவும் நன்றாக விளையாடினார். விக்கெட் மிகவும் மெதுவாக இருந்தது. நான் எவ்வளவு வேகமாக வீசினாலும் அதை அவர் அழகாக தடுத்து விளையாடினார். மேலும் அவர் பந்தை அடிக்கும் பொழுது நான் விரக்தி அடைந்தேன். இதனால்தான் அப்படி செய்து விட்டேன்” என்று கூறி இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை