வர்னே குறித்து பேசும் போது தேம்பி அழுத ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த வெள்ளிக்கிழமையன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சச்சின், மைக்கேல் வாகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மனமுடைந்து பேசினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்னேவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கண்ணீர் மல்க பேசியுள்ளார். அதில், “என் வாழ்வின் பெரும் பகுதி ஒன்று இன்று இல்லாமல் போய்விட்டது, எனது 15 வயதில் வார்னேவை முதன்முதலில் சந்தித்தேன். அன்றில் இருந்து மிகநீண்ட காலம் இருவரும் சேர்ந்து பயணித்துள்ளோம். ஒவ்வொரு ஏற்றத்தாழ்வுகளின் போதும் என்னுடன் பக்கபலமாய் இருந்தவர், அந்த மனிதர் தான். ஆனால் இன்று என்னுடன் இல்லை.
எப்போதுமே தனது நிலை என்பது குறித்து சற்றும் யோசிக்காமல் அணி வீரர்களுக்கு என்ன தேவை என்பதிலேயே தான் தனது கவனத்தை வைத்திருப்பார். என் வாழ்நாளில் என்னுடன் விளையாடிய மிகசிறந்த பவுலரும், வார்னே தான், எனக்கு எதிராக விளையாடிய மிகச்சிறந்த பவுலரும் வார்னே தான். அந்த அரசனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்” என்று தெரிவித்தார்..
இப்படி பேசிக்கொண்டிருந்த போதே, ரிக்கிப்பாண்டிங் திடீரென அழத் தொடங்கினார். வார்த்தைகள் ஏதும் வராமல் பழைய விஷயங்களை நினைவுக்கூர்ந்து நீண்ட நேரமாக தேம்பி தேம்பி அழுதது, பார்த்த ரசிகர்களுக்கும் பெரும் வருத்தமாக இருந்தது. குறிப்பாக இன்றும் காலையில் எழுந்தவுடன் வார்னே இறந்துவிட்டார் என்ற செய்தி கனவாக தானே இருக்கும் என நினைத்தாக தெரிவித்தது, அவர்களின் நட்பிற்கான பெரும் சான்று.