இனி நம் வீட்டில் கல் எறிய மாட்டார்கள் - ரசிகர்களுடன் அஸ்வின் கலகல!
2022 டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான அணி தோல்வியை தழுவியது. 160 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான அணி இந்தியாவுக்கு நிர்ணயித்தது. அதனை கடைசி பந்தில் எட்டி இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என இருந்த போது, நவாஸ் வீசிய பந்தை கணித்து அதனை அடிக்காமல் நின்றதால் பந்து ஓயிடுக்கு சென்றது. இதே போன்று கடைசி பந்தில் தூக்கி நேராக அடிக்க இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடினார்.
அதில், “எந்த ஜென்மத்தில் நான் செய்த பூன்னியமோ, இப்படி ஒரு பெரிய போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் விளையாடியதிலேயே சிறந்த போட்டி என்றால் இது தான். மெல்போர்னில் அன்று குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. என்னால் பந்தை கையால் கூட பிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு குளிர் இருந்தது. பாகிஸ்தானை 140 ரன்களுக்கு மேல் சுருட்டிவிடலாம் என நினைத்தோம்.
ஆனால் அவர்கள் 160 ரன்களை இலக்காக நிர்ணயித்த உடன், நமது பேட்டிங் பலமாக இருப்பதால் சுலபமாக எட்டிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் 4 விக்கெட்டுகள் 41 ரன்களுக்கு சென்ற உடன், பேடை கட்டி கொண்டு அமர்ந்துவிட்டேன். கோலி, ஹர்திக் சிறப்பாக ரன் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் கங்கா போல் அமைதியாக இருந்த விராட் கோலி திடீரென்று சந்திரமுகி போல் மாறிவிட்டார்.
தினேஷ் கார்த்திக் அவுட் ஆன உடன், அவரை பார்த்து அடப்பாவி டேய் என்று மனதில் நினைத்து கொண்டு கடைசி பந்தை எதிர்கொள்ள சென்றேன். ஆனால் விராட் கோலியோ, எனக்கு அப்படி அடி, இப்படி அடி என்று சொன்னார். நான் மனதில் நீ அடிப்ப, நான் அடிக்கனுமே என்று நினைத்தேன். நவாஸ் வீசிய பந்து ஓயிடு போக போகிறது என தெரிந்த உடன், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் நின்றேன். அதில் ஒரு ரன் கிடைத்தது.
அப்போது என் மனதில் நம்பிக்கை வந்தது. கடவுள் மீது பாரத்தை போட்டு பந்தை பார்த்து தூக்கி அடித்துவிடலாம் என நினைத்தேன். காரணம் விராட் கோலி ஒரு ஃபிலிக் செய்த பந்தை சிக்சராக்கிய கடவுள் என்னையும் காப்பாற்றுவார் என நினைத்தேன். அதன் படி, வெற்றி பெற்ற உடன் அப்பாடா இனி நம் வீட்டில் கல் எறிய மாட்டார்கள். தப்பிவிட்டோம் என்று நினைத்தேன். மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்று அஸ்வின் கூறினார்.