எனது பயணம் முடிந்து விட்டது என நினைத்தேன் - ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!
சமீப நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியில் தனி கவனம் ஈர்த்து வருபவர் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். டி20 உலகக்கோப்பை முதல் நியூசிலாந்து தொடர் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த அஸ்வினுக்கு கடந்தாண்டு டெஸ்ட் அணியில் கூட வாய்ப்பு கிடைக்காத சூழல் இருந்தது.
டி20 போட்டிகளில் கலக்கிய அஸ்வின், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை சாய்த்தார். மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 419 விக்கெட்கள் எடுத்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஹர்பஜனை முந்தி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வந்த போதும், டி20 போட்டிகளில் கலக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளிலும் கலக்குகிறார். இப்படிபட்ட வீரரை இத்தனை நாட்களாக எதற்காக ஒதுக்கி வைத்தீர்கள் என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பிசிசிஐ-க்கு சரமாரி கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், தான் சந்தித்த துயரம் குறித்து அஸ்வின் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான் கடந்த 4 ஆண்டுகளாக விளையாடி வந்தேன். ஆனால் 2020 பிப்ரவரியில் நடந்த நியூசிக்கு எதிரான போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் வாழ்கையில் என்ன செய்வது என்ற அச்சம் எழுந்தது. எனது கிரிக்கெட் வாழ்கை இனி முடிந்துவிட்டதா என்று மன வருத்தப்பட்டுள்ளேன். ஆனால் கடவுளின் உதவியால் அவற்றையெல்லாம் தற்போது மாற்றி அமைத்துள்ளேன்.
நான் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போதுதான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சென்றேன். ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற கேப்டன் இருந்ததால் அங்கு எனக்கு இருந்த கஷ்டங்கள் அனைத்தும் போய்விட்டன” என்று தெரிவித்தார்.