என்னிடமிருந்த சிறந்ததை வாங்கா அவருக்கு தெரியும் - லலித் யாதவ்
ஐபிஎல் 15ஆவது சீசனின் இரண்டாம் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ்யை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பந்த், மும்பைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 177 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்களை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் ஷர்மாவும் தனது பங்கிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தார்.
பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் பிரித்வி ஷா (38), செய்பர்ட் (21), மந்தீப் சிங் (0), ரிஷப் பந்த் (1) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிரடி வீரர் ரௌமேன் பௌலும் (0) ஏமாற்றினார்.
இதனால் ஸ்கோர் 72/5 என இருந்தது. அந்த சமயத்தில் லலித் யாதவ் (48), ஷர்தூல் தாகூர் (22), அக்சர் படேல் (38) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், டெல்லி அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதனால், மும்பை அணி தொடர்ந்து 10ஆவது சீசனில் முதல் போட்டியில் தோற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு பின் பேசிய லலித் யாதவ், “அக்ஸர் படேல் மறுமுனையில் இருக்கும்போது நான் மிகவும் வசதியாக உணர்ந்தேன். அவருக்கு எனது ஆட்டம் தெரியும், என்னிடமிருந்து சிறந்ததை எப்படிப் பெறுவது என்பது அவருக்குத் தெரியும்.
நாங்கள் ஒருவரையொருவர் எங்கள் விக்கெட்டுகளை அப்படியே வைத்திருக்கவும், எங்கள் அணியை வெற்றிக்கு எடுத்துச்செல்லவும் சொல்லிக் கொண்டிருந்தோம். தொடர்ந்து விளையாடினால் கடைசி ஓவருக்கு முன்பே வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.