அஸ்வின் 1000 விக்கெட்டுகளை வீழ்த்துவார் - ஷேன் வார்னே நம்பிக்கை!

Updated: Tue, Jan 25 2022 12:55 IST
Image Source: Google

சர்வதேச டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் முதல் 2 இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்களே உள்ளனர். இலங்கையை சேர்ந்த முரளீதரன் 800 விக்கெட் (133 டெஸ்ட்) எடுத்து முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வார்னே 702 விக்கெட் (145 டெஸ்ட்) எடுத்து 2ஆவது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 640 விக்கெட் வீழ்த்தி (169 டெஸ்ட்) 3ஆவது இடத்தில் உள்ளார். தற்போது உள்ள வேகப்பந்து வீரர்களில் அவரும், ஸ்டூவர்ட் பிராட்டும் விளையாடி வருகிறார்கள். ஸ்டூவர்ட் பிராட் 537 விக்கெட் எடுத்து 6ஆவது இடத்தில் இருக்கிறார்.

வேகப்பந்து வீரர்களால் முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போது இருக்கும் சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், நாதன் லயன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் 84 டெஸ்டில் 430 விக்கெட்டும், லயன் 415 விக்கெட்டும் (105 டெஸ்ட்) கைப்பற்றி உள்ளனர்.

இந்தநிலையில் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 1000 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து பேசிய, “அஸ்வின், லயன் ஆகிய இருவருமே எனது சாதனையையும், முரளீதரனின் சாதனையையும் முறியடிப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் இருவருமே மிக அற்புதமான சுழற்பந்து வீச்சாளர்கள். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருவதை பார்க்க முடிகிறது.

அஸ்வினும், லயனும் டெஸ்ட் போட்டியில் 1000 விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் அது மிகவும் அருமையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

3 வடிவிலான போட்டிகளில் சேர்த்து (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வார்னே, முரளீதரன் ஆகியோர்தான் கைப்பற்றி உள்ளனர். முரளீதரன் 1,347 விக்கெட்டும் (583 இன்னிங்ஸ்), வார்னே 1,001 விக்கெட்டும் (466 இன்னிங்ஸ்) வீழ்த்தி உள்ளனர்.

தற்போது விளையாடி வரும் வீரர்களில் ஆண்டர்சன் 927 விக்கெட்டும் (524 இன்னிங்ஸ்), ஸ்டூவர்ட் பிராட் 780 விக்கெட்டும் (456 இன்னிங்ஸ்), அஸ்வின் 642 விக்கெட்டும் (320 இன்னிங்ஸ்) கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது..

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை