கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டேன் - சவுரவ் கங்குலி!
இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் விராட் கோலி. இந்நிலையில் தனது பணிச்சுமையை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அதிரடியாக அறிவித்தார்.
அவரது தலைமையில் டி20 கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது.
இதையடுத்து டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித்தின் தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி. டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டபோதே, ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளிவந்துவிட்டது.
அந்தவகையில் கடந்த 8ஆம் தேதி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து பேசியுள்ள சவுரவ் கங்குலி, “நான் தனிப்பட்ட முறையில் கோலியிடம் டி20 கேப்டன்சியை விட வேண்டாம் என கூறினேன். அவருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது என்பது எனக்கும் தெரியும். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணியை நீண்டகாலமாக வழிநடத்துகிறார். நீண்டகாலம் அணியை வழிநடத்தும்போது இதெல்லாம் நடக்கும். நானும் கேப்டனாக இருந்திருக்கிறேன் என்பதால் எனக்கு தெரியும்.
அதேவேளையில், தேர்வாளர்கள் டி20 மற்றும் ஒருநாள் அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவதை விரும்பவில்லை. அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு சிறந்த அணியில் நிறைய லீடர்கள் இருக்கமுடியாது” என்று தெரிவித்தார்.